
இந்தியா மற்றும் சீனா இராணுவ வீரர்கள் கற்களை வீசி, பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா- சீனா நாடுகளுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு கல்வான் தாக்குதலுக்கு பின், இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை பெரிதாகிவிட்டது.
இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலுமே இரு நாடுகளும் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இதற்கிடையில், இரு நாட்டின் இராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையே இதுவரை 12 கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுவிட்டது.
ஆனால், அதில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்பவில்லை. இந்நிலையில், கல்வான் மோதல் தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதை சீனா வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், கடந்த ஆண்டு ஜுன் 15-ஆம் திகதி, இந்தியாவின் எல்லையில் சீன இராணுவ வீரர்கள் கூடாரம் அமைக்க முயன்றுள்ளனர். ஆனால், இந்திய இராணுவ வீரர்கள் இதைக் கண்டு தடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கிடையே கடும் மோதல் நிலவியுள்ளது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவோ நான்கு பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறியது.
ஆனால் சீனா பக்கம் அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன. சீனா இந்த விஷயத்தில் உண்மைகளை மறைப்பதாக கூறப்பட்டு வருகிறது.
கடந்த 1962ஆம் ஆண்டு ஏற்பட்ட போருக்குப் பிறகு எல்லையில் ஏற்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
குறித்த வீடியோவில், இராணுவ கூடாரம் ஒன்றைச் சிலர் நீக்க முயல்வதும் அப்போது சீன இராணுவத்தினர் அவர்களுடன் மோதுவதும் போன்று உள்ளது.
அதைத் தொடர்ந்து, கல்வான் நதி அருகே இந்தியா இராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும், அதன் பின் காயமடைந்த வீரர்களைக் குளிர்ச்சியான நீர் நிறைந்த கல்வான் நதியில் சீன இராணுவம் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வது போன்றும் அதில் பதிவாகியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே எல்லை விவகாரத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்த வீடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://news.lankasri.com/article/galwan-valley-clash-indian-and-chinese-soldiers-1628004243