
கிர்லோஸ்கர் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களிடையே நிறுவனத்தின் பங்குகளை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட பிணக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிர்லோஸ்கர் நிறுவனம் பலவித நீர் மோட்டார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாகும். 133 ஆண்டுகளாக மோட்டார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் பாரம்பர்யமான நிறுவனமும் கூட.
2009-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சொத்துகள் கிர்லோஸ்கர் நிறுவனத்தின் மூன்று சகோதரர்கள் இடையே பங்கு பிரிக்கப்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி மின் மோட்டார்களைத் தயாரிக்கும் நிறுவனம் மூத்த சகோதரர் சஞ்சய் என்பவரிடம் சென்றது.
வேறு சில நிறுவனங்கள் பிற சகோதரர்களான அதுல் மற்றும் ராகுலிடம் சென்றது. இவ்வாறு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோது ஒரு சகோதரர் மற்றொரு சகோதரர் உடைய நிறுவனம் தயாரிக்கும் பொருள்களைத் தமது நிறுவனத்தில் உற்பத்தி செய்யக் கூடாது என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
ஓர் உதாரணத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் பிரிக்கப்பட்டபோது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானியிடம் சென்றது. கிர்லோஸ்கர் நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைப் போல் ரிலையன்ஸ் நிறுவனத்திலும் சகோதரர்கள் இருவரும் மற்றவரின் பிசினசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு செய்யக் கூடாது என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகத்தான் முகேஷ் அம்பானி தொலைத்தொடர்புத் துறைக்குள் நுழையவில்லை. 10 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கினார்.
ஆனால், சஞ்சய்க்கு ஒதுக்கப்பட்ட மோட்டார் தயாரிக்கும் தொழிலை அவருடைய மற்ற சகோதரர்கள் அவர்களது நிறுவனத்தில் வேறு பெயர்களில் தயாரிப்பதாக சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார். “இதன் மூலம் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தமது குடும்ப உறுப்பினர்கள் மீறிவிட்டனர். அதனால் இதற்கு உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்” என்று சஞ்சய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை எதிர்த்து பிற சகோதரர்கள் தமது சார்பு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.