
லே-லடாக் யூனியன் பிரதேசத்தில் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சினிமா தியேட்டர், உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள திரை அரங்கம் என்ற பெருமையை பெறுகிறது.
இமய மலையின் சிகரத்தில் அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேசம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன எல்லைக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பொழுது போக்குக்கு திரை அரங்குகள் இல்லாத நிலை உள்ளது.கடும் குளிர் பிரதேசம் என்பதால் திரை அரங்குகளை அமைத்து அதை பராமரிப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில், லேவில் உள்ள என்.எஸ்.டி., மைதானத்தில் ‘பிக்சர் டைம் டிஜிப்ளேக்ஸ்’ என்ற நிறுவனம், நடமாடும் ‘டிஜிட்டல்’ திரை அரங்கை அமைத்துள்ளது.இது, கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உயரத்தில் இயங்கும் திரை அரங்கம் என்ற பெருமையை இது பெறுகிறது.

கடுங்குளிரை தாங்கும் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரை அரங்கம் மைனஸ் 28 டிகிரி குளிரில் கூட இயங்கும் திறன் உடையது. இங்கு மேலும் நான்கு நடமாடும் திரை அரங்குகள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக திரை அரங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.புதிய திரை அரங்கு துவக்க விழாவில், லடாக் பவுத்த சங்கத்தின் தலைவர் துப்ஸ்தன் சீவாங் ‘பாலிவுட்’ நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833943