
கவுகாத்தி: மிசோரம் போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ள அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா, எந்த போலீஸ் ஸ்டேசனிலும் ஆஜராக தயார் எனக்கூறி உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை தீவிரமாகி, சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் பலியாயினர். அசாம் முதல்வரின் பேச்சு வன்முறைக்கு வித்திட்டதாக மிசோரம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் கலவரம் பரவ காரணமாக இருந்ததாக முதல்வர், ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் 200 போலீசார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா கூறுகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், பிரச்னை தீர்ந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன். எந்த போலீஸ் ஸ்டேசனுக்கும் விசாரணைக்காக செல்ல நான் தயார். ஆனால், எனது அதிகாரிகள் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்க மாட்டேன். எல்லை பிரச்னையை தீர்ப்பதற்காக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாநிலங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதே நமது முக்கிய நோக்கம். அசாம் – மிசோரம் மாநில எல்லையில் நடந்த நிகழ்வுகள், இரு மாநில மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல. பேச்சுவார்த்தை மூலமே, எல்லை பிரச்னை தீர்க்க முடியும் எனக்கூறியுள்ளார்.
வழக்கு வாபஸ்!
இதனிடையே மிசோரம் மாநில தலைமை செயலர் லால்நுமவியா சுவாங்கோ கூறுகையில், அசாம் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எங்களது முதல்வர் ஜோரம் தங்கா விரும்பவில்லை. அது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி கூறினார். இது தொடர்பாக, வழக்கை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன். சட்ட பிரச்னை ஏதும் இல்லை எனில், அசாம் முதல்வரின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814258