
திருப்பூர்:அடுத்தாண்டு ஜூலை முதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது; ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்தும், திருப்பூரில் தொடரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்து, இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2019 ஜன., 1ல், தடை துவங்கியபோது, கண்டிப்புடன், இதை அமல்படுத்துவதில், அரசும், அதிகாரிகளும் அக்கறை காட்டினர். நாட்கள் செல்ல செல்ல, தடை மாயமாகிவிட்டது.கடைகளிலும், பொதுமக்களும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தாராளமாக பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக, இரண்டு ஊரடங்குகளிலும், பொது முடக்கத்தை அமல்படுத்துவதில், மத்திய, மாநில அரசுகள் கண்ணும், கருத்துமாக செயல்பட்டன. இதில், பிளாஸ்டிக்குக்கான தடை, ‘கோட்டை’ விடப்பட்டிருக்கிறது.
திருப்பூரில் காய்கறி விற்பனையில் துவங்கி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்குக் கூட, இவை, தீங்கு விளைவிக்கும் என்பதை பொதுமக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும்.
மத்திய அரசு தடை
தற்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த சட்டம் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் வெளியிட்டது.இதில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டு உள்ளது.
உற்பத்தி நிலையில் இருந்து தடை செய்தால்தான், ஒருமுறை பிளாஸ்டிக் பயன்படுத்துதலை ஒழிக்க முடியும். உற்பத்தி, வினியோகம், விற்பனை நடந்தால், அப்பொருள் புழக்கத்துக்கு வரத்தானே செய்யும்!
யோசனைகள்
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக, வாழை இலை, பனை பொருட்கள், கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் குவளைகள், மூங்கில் பொருட்கள், காகித பை, காகித குழல், துணி – சணல் பைகள், அலுமினிய பொருட்கள், மண்பாண்ட வகைகள், தாமரை இலை, உலோக டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
”அரசு அலுவலகங்கள் முன்னுதாரணமாக இருந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கும், விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கும், ஊக்குவிப்பு வழங்க வேண்டும்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்தால் சோதனைசாவடியில் நிறுத்தி பறிமுதல் செய்ய கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோருக்கு மாற்றுத் தொழிலுக்கான கடனுதவி வழங்கப்பட வேண்டும்; தொழிலாளர்களுக்கும் வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கண்டறியப்பட வேண்டும்” என்ற யோசனைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823600