
தமிழகத்தைப் போல் கர்நாடகத்திலும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்ற நிலையில், பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பயன் பெறுவார்கள். அதே போல் கர்நாடகத்திலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.