
கேரளாவில் தேனியைச் சேர்ந்த பெண், ஏலத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பொடிமெட்டு பகுதியையைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி விமலா. இவர்களுக்கு இளங்கோவன், கோபி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகேயுள்ள கோரம்பாறையில் இவர்களுக்குச் சொந்தமாக 5 ஏக்கர் ஏலக்காய் தோட்டம் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக ஏலத் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி ஏலக்காய் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், வழக்கம்போல விமலா, ஏலத்தோட்டத்தில் களையெடுப்பு பணியைச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அத்தோட்டத்தின் வழியே, காட்டு யானைக் கூட்டம் கடந்து சென்று கொண்டிருந்தது. யானைகளைப் பார்த்த விமலா, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். பதட்டத்தில் ஓடிய விமலா கால் இடறிக் கீழே விழுந்துள்ளார். அதில், ஒற்றை யானை ஒன்று, துதிக்கையால் விமலாவைத் தூக்கி வீசியது. பின்னர் காலால் மிதித்ததாகவும் சொல்லப்படுகிறது. விமலாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் விமலா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனே, அவரை மீட்டு ஆம்புலன்ஸில் அடிமாலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விமலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தொடர்ச்சியாக பூப்பாறை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த யானை கூட்டத்தின் நடமாட்டத்தால் பல உயிர்கள் பலியாகி உள்ளது. இதேபோல, தேனி மாவட்டத்தில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, போன்ற 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலத்தோட்டங்கள் உள்ளது. அங்கும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
இவை, பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களை தொந்தரவு செய்வதில்லை என்றாலும், கேரளாவில் ஏலத்தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை காட்டு யானை தாக்கிய சம்பவம், தேனி மாவட்ட மலைக்கிராம தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: https://www.vikatan.com/news/accident/theni-women-died-in-human-elephant-conflict-in-kerala