
ஒவ்வொரு நோயாளியும் குறைந்தபட்சம் ஐந்து நாள்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகப் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிகமான தொகையை செட்டில் செய்ய வேண்டியிருந்தது.
கொரோனா கவாச் மற்றும் கொரோனா ரக்ஷக் ஆகிய 2 காப்பீட்டுத் திட்டங்களும் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகப் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த இழப்பை ஈடுகட்ட காப்பீட்டு பிரீமியத்தை இந்த வகை பாலிசிகளில் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையத்திடம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
சென்ற ஆண்டு கொரோனா நோய்த்தொற்று அதிகரித்த காலகட்டத்தில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளித்திடும் திட்டங்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
அதன்படி கொரோனா கவாச் திட்டத்தில் 50,000 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு எடுக்க முடியும். கொரோனா ரக்ஷக் திட்டத்தில் 50,000 ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு எடுக்க முடியும்.
நமது நாட்டில் மிக அதிக அளவிலான மக்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் உலக சராசரியைவிட மிக அதிகமாக நமது நாட்டில் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் காரணமாகக் குறுகிய காலத்தில் மிக அதிக க்ளெய்ம் தொகையை செட்டில் செய்யும் நெருக்கடிக்கு பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதுபோன்ற திட்டத்தில் காப்பீட்டுத்தொகை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக இருந்தன.

ஒவ்வொரு நோயாளியும் குறைந்தபட்சம் ஐந்து நாள்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகப் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிகமான தொகையை செட்டில் செய்ய வேண்டியிருந்தது.
மேலும் இந்தத் திட்டங்கள் மிகவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தத் திட்டங்கள் மூன்றரை மாதம், ஆறரை மாதம் மற்றும் ஒன்பதரை மாதம் என்று மூன்று அளவுகளில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் பலர் திட்ட காலம் முடிவடைந்தவுடன் காப்பீட்டு திட்டத்தை நீட்டிப்பு செய்வதும் இல்லை. இதன் காரணமாகவும் இந்தத் திட்டங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு போதுமான பலனைத் தரவில்லை.
மேலும் வாடிக்கையாளர்களில் பலர் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் க்ளெய்ம் செய்ய முயல்வதாகக் காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் பலரும் தமது மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு கோருகின்றனர். வீட்டிலிருந்து பெறப்படும் சிகிச்சைகளுக்குப் பொதுவாக காப்பீடு வழங்கப்படுவது இல்லை. மருத்துவ செலவுகளுக்கான போதுமான ஆவணங்கள் இல்லாமல் காப்பீடு செட்டில் செய்யப்படாது. இதன் காரணமாக க்ளெய்ம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 65% மட்டுமே பரிசீலிக்கப்பட்டு செட்டில் செய்யப்பட்டுள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை பற்றிய பயம் மக்களிடம் மிகுந்த அளவில் உள்ளது. அவர்களுக்கு குறைந்த விலையில் பலன் கிடைக்கும் இதுபோன்ற காப்பீட்டு திட்டங்கள் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற திட்டங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நஷ்டத்தை உண்டு செய்வதாக இருக்கின்றன. இரண்டு தரப்பினரின் பிரச்னையை சமநிலையில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கையை ஐ.ஆர்.டி.ஏ.ஐ எடுக்க வேண்டும் என்பது காப்பீட்டு நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.