
சென்னை : சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிக்கும் வகையில், மின் நிலையங்கள், மின் பகிர்மான மண்டலங்களில் உபகரணங்கள் கொள்முதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான, ‘டெண்டர்’ மதிப்பின் அதிகாரத்தை, மின் வாரியம் அதிரடியாக குறைத்துள்ளது.
தமிழக மின் வாரியம், மின் வினியோகத்திற்கு பயன்படும் ‘மீட்டர், டிரான்ஸ்பார்மர், கேபிள்’ போன்ற உபகரணங்களை, தலைமை அலுவலகத்தில் உள்ள, ‘உபகரணங்கள் மேலாண்மை’ பிரிவு வாயிலாக மொத்தமாக கொள்முதல் செய்கிறது.இது தவிர, பழுது, பராமரிப்பு பணிக்காக, தங்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை தாங்களே வாங்கி கொள்ள, அனல் மின் நிலையங்கள், பகிர்மான மண்டலங்கள், மின் தொடரமைப்பு பிரிவுகளின் தலைமை பொறியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சிலர், ‘கமிஷனுக்காக’ அவசியம் இல்லாத உபகரணங்களை வாங்கி, பணத்தை வீணடிப்பதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், தாங்களே கோரும் டெண்டர் மதிப்பின் அதிகாரங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, அனல், நீர் மின் நிலையங்களின் தலைமை பொறியாளர்கள், உபகரணங்கள் கொள்முதல் மற்றும் சேவை பணிக்காக டெண்டர் கோரும்போது, அதன் அதிகபட்ச மதிப்பு 50 லட்சம் ரூபாயை தாண்டக் கூடாது என்பதுடன், ஒரு நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மதிப்பிற்கு மட்டும் டெண்டர் கோர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.கட்டுமானம் போன்ற பணிக்கான டெண்டரில், அதிகபட்ச மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நிதியாண்டில் 5 கோடி ரூபாய்க்கு மட்டும் டெண்டர் கோர வேண்டும்.
மின் வினியோக மண்டல தலைமை பொறியாளர்கள், உபகரணங்கள் கொள்முதல் சேவைக்காக டெண்டர் கோரும் போது 50 லட்சம் ரூபாயை தாண்டக் கூடாது என்பதுடன், ஒரு நிதியாண்டில் 5 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் கோரக் கூடாது. கட்டுமான பணிக்காக டெண்டர் கோரும்போது, ஒன்றின் மதிப்பு 1 கோடி ரூபாயை தாண்டக் கூடாது. ஆண்டுக்கு ௫ கோடி ரூபாய்க்கு மேல் கோரக் கூடாது.இதேபோல், ஒவ்வொரு பிரிவு பொறியாளர்களின் டெண்டர் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு மாதத்திற்கு 1,500 – 2,000 கோடி ரூபாய் வரை வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், செலவு குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன், ஆண்டுக்கு இவ்வளவு மதிப்புக்கு தான் டெண்டர் கோர வேண்டும் என உச்சவரம்பு கிடையாது. தற்போது உச்சவரம்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவசியம் இல்லாத உபகரணங்களை கொள்முதல் செய்வது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2828397