
கலாபசாஸ்-அமெரிக்காவில் சிறுவனை துாக்கிச் சென்ற சிங்கத்தை, கையால் அடித்து விரட்டிய தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ளது கலாபசாஸ் கிராமம். இங்கு ஒரு வீட்டின் வெளியே 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென பாய்ந்து வந்த மலைச் சிங்கம், சிறுவனை கவ்வி இழுத்துச் சென்றது.
சிறுவனின் அலறலைக் கேட்ட தாய், வீட்டில் இருந்து ஓடோடி வெளியே வந்தார். அங்கு தன் குழந்தையை சிங்கம் இழுத்துச் செல்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், துணிவுடன் தன் பலத்தை எல்லாம் திரட்டி சிங்கத்தை கையால் ஓங்கி பலமுறை அடித்தார். ஒவ்வொரு அடியும் இடிபோல விழுந்ததால் நிலை குலைந்த சிங்கம், சிறுவனை விட்டு ஒரு பொந்தில் மறைந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனப் பாதுகாவலர், ஒளிந்திருந்த சிங்கத்தை சுட்டுக் கொன்றார். சிங்கம் தாக்கியதால் தலை, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.உயிரைப் பணயம் வைத்து பெற்ற குழந்தையை சிங்கத்திடம் இருந்து மீட்ட தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2834146