
ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், கட்சிப்பணி, ஆட்சி பணி என, இரட்டை குதிரையில், சவாரி செய்யும், தி.மு.க., அமைச்சர்கள், 24 பேரின் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., வில், அமைப்பு ரீதியாக, 77 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். அதில், பெரும்பாலான மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களாக உள்ளனர். இதனால், அவர்களால் கட்சி பணிகளில்சரவர ஈடுபட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, மாவட்ட அளவில் எழுந்துள்ளது. சில அமைச்சர்கள், தங்கள் துறையில் வருமானம் வரும் பணிகளுக்கு மாமனார், மைத்துனர்,மருமகன், மகன் என, உறவினர்களை அதிகார மயமாக்கி உள்ளனர்.
மாவட்டச் செயலராக இருக்கும் அமைச்சர்கள், நெருங்கிய உறவினர்களை தங்களின் பினாமியாக வைத்து, சொத்துக்களை வாங்குகின்றனர் என்ற புகார் மனுக்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளது. அமைச்சரின் பரிந்துரை கடிதம் கேட்டு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, அமைச்சர்களின் உறவினர்கள் புறக்கணிக்கின்றனர். இதில் பாதிக்கப்படும் கட்சியினர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், சில கட்சியினர், தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதங்களையும், கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். அறிவாலய ஊழியர்கள் சிலர், ஜாதி அடிப்படையில், தங்களுக்கு வேண்டிய அமைச்சர்களிடம் துறை ரீதியான காரியங்களை சாதித்துவருகின்றனர். இந்த மாதிரியான புகார்களின் அடிப்படையில், அறிவாலயத்தில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் மூத்த ஊழியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது.
அவர்கள் வகித்த பதவிக்கு, இளைஞரணி செயலர் உதயநிதி எம்.எல்.ஏ.,வின் நம்பிக்கைக்குரிய புதிய நிர்வாகிகளை நியமிக்க, கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.சமீபத்தில், அறிவாலயத்தில் துணை அமைப்புச் செயலர் பதவி அன்பகம் கலைக்கு வழங்கப்பட்டது. இதனால், கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கிற ராஜ்யசபா எம்.பி., ஒருவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.மாவட்டச் செயலர் பதவி வகித்து வரும் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பதவி வகிக்காத அமைச்சர்கள், 10 பேர் தவிர்த்து, மீதமுள்ள 24 அமைச்சர்களிடம் மாவட்டச் செயலர் பதவி நீடிக்கிறது.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற பார்முலா அடிப்படையில், 24 அமைச்சர்களிடம் இருந்து, மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட உள்ளது. இளைஞரணி செயலர் உதயநிதி எண்ண ஓட்டத்திற்கும், அவரது வயதுக்கு ஈடு கொடுக்கக் கூடியவர்களையும் புதிய மாவட்டச் செயலராக்கும் வகையில் பட்டியல் தயாராகி வருகிறது. அதில் புதுமுகங்களும், அ.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,வில் இணைந்த முக்கிய பிரமுகர்களும், இளைஞர்களும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source: https://www.paristamil.com/tamilnews/view-news-NDQ1NjU1NDg3Ng==.htm