
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனங்களை இயக்குவது சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனாலும், பல பகுதிகளில் செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவதை நம்மால் காண முடியும்.

சிலர் ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே வாகனங்களை இயக்குவர். கோவையில் இதையெல்லாம் மீறி ஓர் சம்பவம் நடந்துள்ளது.
கோவை காந்திரபுரம் பகுதியில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அது. காந்திபுரம் புதிய மேம்பாலத்தில் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்கிறார். அந்த நபர் தனது செல்போனை, ஸ்டாண்ட் மூலம் பைக்கில் இணைத்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது செல்போன் பார்ப்பது அவரது பழக்கம். அன்றைய தினம் செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டே ஜாலியாக செல்கிறார்.
இந்த விஷயத்தை, அந்த நபரின் அருகில் பயணித்த மற்றொருவர் வீடியோவாக எடுக்க, அது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வாகனத்தை ஆய்வு செய்தபோது, அது முத்துசாமி என்பவர் பெயரில் உள்ளது தெரியவந்தது.

‘இதுபோல வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.