
சிமெண்ட், ஜல்லி, கம்பிகள் கொண்டுதான் பொதுவாக பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு ஆகும் செலவும், காலமும் அதிகம். அதுவே, இரும்பிலான பாலங்களை 100 நாட்களில் கட்டி முடித்துவிடலாம், செலவும் மிகக்குறைவு என்கிறார்கள்.
தி.மு.க ஆட்சியின் ஸ்பெஷாலிட்டியே பாலங்கள் அமைப்பதுதான். இன்று சென்னையில் நாம் காணும் பாலங்களில் பல தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான். பாலங்களின் கட்டுமானத்தில் புதிய மைல்கல்லை எட்டும் விதத்தில், கனரக வாகனங்களும் செல்லும் வகையில் முழுவதும் இரும்பினாலான பாலங்களை அமைக்க தி.மு.க அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், “பொதுவாக கட்டடங்கள் எப்படி அமைக்கப்படுகிறதோ, அதேபோன்றுதான் சிமெண்ட், ஜல்லி, இரும்புக்கம்பி கொண்டு பாலங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. பாலங்களை எல்லா இடங்களிலும் அமைக்க முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் இடங்களிலும், தேவை ஏற்படும் பகுதிகளிலும் மட்டுமே அமைக்கப்படும். அதற்காக முதலில் பாலம் அமைக்கப்படும் பகுதியில் மண்ணைத் தோண்டியெடுத்து, லேபுக்கு அனுப்பி சாயில் டெஸ்ட் எனப்படும் மண் பரிசோதனை செய்யப்படும். அப்படி செய்தால்தான், அந்த மண் பாலத்தையும், அதன்மீது செல்லும் வாகனங்களையும் தாங்கி நிற்குமா என்பது புலப்படும்.

அதன்பிறகு, பாலத்தின் அகலத்துக்கேற்ப சாலையில் பில்லர் நடுவதற்காக குழிகளைத் தோண்டிட வேண்டும். சிமெண்ட்டில் தூண் பதித்து, அதைக் காயவிட்டு, அதன்பின் பாலத்தின் மேற்பரப்பை கிரேன் மூலம் பில்லர்களில் ஃபிக்ஸ் செய்திட வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த புராசஸ் முடிவதற்கு சூழ்நிலைக்கேற்ப 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை அந்தச் சாலை பாதியளவு அடைக்கப்பட்டு, `டேக் டைவெர்ஷன்’ பலகை வைக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பிவிடப்படும். இக்கட்டுமானத்தின் தொகையும் அதிகம், கால நேரமும் அதிகம்.
இதனை பொதுப்பணித்துறை நேரடியாக மேற்கொள்ளாமல், டெண்டர் விட்டுத்தான் மேற்கொள்ள முடியும்.
டெண்டரில் எடுத்த நிறுவனம் தனது கைக்காசைப்போட்டு வேலையைத் துவங்க வேண்டும். உள்ளூர் அரசியல் ஆட்கள் முதல் அமைச்சர் வரை கமிஷன் கொடுத்திட வேண்டும். அவ்வப்போது பில்லை துறை அதிகாரிகளிடம் கொடுத்து செட்டில்மெண்ட் வாங்கிக்கொள்வார்கள். பில் செட்டிலாகவில்லை என்றால் பணிகளில் தொய்வு ஏற்படும். கட்டுமானத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றாலும் பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறான காரணங்களால்தான் கோயம்பேடு மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவுபெறாமல் ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாகத்தான் புதிய தொழில்நுட்பத்திலான மேம்பாலக் கட்டுமானத்தை மலேசிய கட்டுமான நிறுவனமான DSCAFF INDUSTRIAL SERVICES என்கிற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், சிலி, பிரேசில் போன்ற பல நாடுகளில் இரும்புப் பாலங்களை அமைத்திருக்கும் அந்நிறுவனம் அடுத்து தமிழகத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. மிக குறுகலான இடங்களில் கூட இரும்புப் பாலங்களை அமைத்துக் கொடுப்பதில் இந்நிறுவனம் கை தேர்ந்தது என்கிறார்கள். பொதுவாக பாலங்கள் அமைக்க வருடக்கணக்கில் காலம் செலவாகிறது. இவர்களுடைய டெக்னாலஜியைப் பயன்படுத்தி இரும்பில் பாலங்கள் அமைப்பது வெறும் 100 நாட்களில் முடிந்துவிடும். 110 நாளில் திறப்பு விழாவையே ஏற்பாடு செய்துவிடலாம்.

நம்மூரில்தான் இரும்புப் பாலங்கள் இருக்கிறதே என்று நினைக்கலாம். தி.நகர் ரயில் நிலையம் முதல் பேருந்து நிலையம் வரை கூட தற்போது இரும்பில் பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. அது மக்கள் நடப்பதற்கு மட்டுமே. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் சாலையிலும், கடலிலும், ஆற்றிலும் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம், கொல்கத்தா ஹவுரா பாலம் போல பிரமாண்ட பாலங்களை அமைக்க முடியும். பாலத்தின் மேற்பரப்பில் தார்ச் சாலைகளையும் போட முடியும். டாரஸ் லாரி முதலான கனரக வாகனங்கள் சென்றாலும் தாங்கும் அளவுக்கு இதன் ஸ்திரத்தன்மை அமைந்துள்ளது. செலவும் இதில் மிகக்குறைவுதான் என்கிறார்கள்.
இந்தியாவில் புதிதாக அடியெடுத்து வைப்பதால், அனுமதி கொடுத்து ஒப்பந்தம் நிறைவேற்றினால் போதும், முதலில் அந்நிறுவனத்திலிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வுசெய்து, தொடர்ந்து இங்குள்ள பணியாளர்களையே வேலைக்கு அமர்த்தி 100 நாட்களில் பாலத்தைக் கட்டியே முடித்துவிடுவார்கள். பில் தொகையை இ.எம்.ஐ-யில் கொடுத்தால் போதும் என்கிறார்கள்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் இல்லத்திலிருந்து, திருவள்ளுவர் சிலை வரையிலான 140 அடி கடல் பரப்பில் இருப்புப் பாலத்தை அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியா சிட்னி நகரிலுள்ள பாலம் போன்று பிரமாண்டமாக இருக்க வேண்டுமென முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அந்த புராஜெக்ட்டை இந்த மலேசிய நிறுவனத்திடம் ஒப்படைக்கலாமா என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்பதோடு முடித்தனர்.
மலேசிய நிறுவனத்தை தமிழக அரசுக்கு அறிமுகப்படுத்திய வழக்கறிஞர் பிரகாஷிடம் பேசினோம். “எனது நண்பர் மூலம் அறிமுகமான இந்த மலேசிய நிறுவனம் குறித்து பொதுப்பணித்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, அந்த நிறுவன பிரதிநிதிகளை அரசு அதிகாரிகளுடன் சந்திக்க வைத்தேன். பின்னர் ஜூலை 18-ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் புராஜெக்ட்டை சமர்ப்பித்துவிட்டேன். இந்த நவீன தொழில்நுட்பம் குறித்தும், அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்தபோது, முழுமையாக உள்வாங்கிக்கொண்டார். தி.மு.க ஆட்சி என்றாலே பாலங்கள் அமைப்பதில்தான் ஸ்பெஷல் என்பதால், அதுவும் தனது துறையின் கீழ் இத்தகைய டெக்னாலஜியை அமல்படுத்த துடிப்பாகவே இருக்கிறார். கண்டிப்பாக இதனை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செலவதாகத் தெரிவித்தார். இறுதி முடிவு முதல்வர் கைகளில்” என்றார்.