
சாமிதோப்பில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூரைச் சேர்ந்தவர் இரத்தினசுவாமி. இவர் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் கௌதமி இந்திய அரசின் தபால் துறையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டிவிஷன் கட்டுப்பாட்டிலுள்ள நெய்யூர் தபால் அலுவலகத்தில் போஸ்டல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகள் வேலைபார்த்து வந்த அவர் பணிபுரிந்த காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு விடுமுறை கேட்டதற்கு அதிகாரிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு முறையீடு செய்ததால் அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர். அதே சமயம் ஏற்கனவே முதல் குழந்தை பேறு காலத்திற்கு எடுத்த விடுமுறையை ரத்து செய்துள்ளனர். மேலும் முதல் பேறுகால விடுமுறை சமயத்தில் பெற்ற சம்பளத்தை திரும்ப செலுத்துமாறு கெளதமியை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் கெளதமி வயிற்றில் இருந்த ஒரு கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மருத்துவ விடுமுறை கேட்டபோது கூட அதிகாரிகள் மறுத்துள்ளனராம்.
இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று அனுமதி பெற்று கட்டியை அறுவை சிகிச்சை செய்ய சென்றுள்ளார். அப்போதும் மாவட்ட அளவில் உள்ள தபால் துறை அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர் பிரச்னை காரணமாக தனது போஸ்டல் அஜிஸ்டெண்ட் பணியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், கெளாதமியை பணி நீக்கம் செய்துள்ளதாக இப்போது நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் கெளதமி மனம் உடைந்து போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கெளதமியின் தந்தை இரத்தினசுவாமி இன்று சாமிதோப்பில் அய்யா வழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரிடம் ஆசி பெற்றுள்ளார். பின்னர் ஒரு கோரிக்கை மனுவை தலையில் சுமந்தவாறு சாமிதோப்பில் இருந்து நாகர்கோவில் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இரத்தினசுவாமி கூறுகையில், “என் மகளின் உயிரை காப்பாற்றுவதற்காக நான் இந்த நடை பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். என் மகள் எல்லா விடுப்பையும் உயர் அதிகாரிகளிடம் கேட்டுதான் பெற்றாள். கட்டி அறுவை சிகிச்சைக்காக எடுத்த விடுமுறைக்கான சம்பளம் இன்னும் கொடுக்கவில்லை. என் மகளை இவ்வளவு கொடுமை செய்வதற்கு காரணம் அவர் ஒரு தொழிற்சங்கத்தில் இருந்து மற்றொரு தொழிற்சங்கத்துக்கு மாறியதுதான்.
இந்த கொடுமை தாங்க முடியாமல் ஒரு ஆண்டுக்கு முன் என் மகள் வேலையை ராஜினனாமா செய்தார். ஆனால் அவர்கள் ஒரு வாரத்துக்கு முன் என் மகளுக்கு அளித்த நோட்டீஸில் டெர்மினேட் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னை காரணமாக உடல்நலம் குன்றி மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார். அவளது உயிருக்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன். எனவே டெர்மினேட் நோட்டீசை ரத்து செய்து விடுப்புக்கான ஊதியத்தை வழங்கி என் மகளைக் காப்பாற்ற வேண்டும். இதுகுறித்து பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.