
சென்னை: ‘அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்ற விதியை மீறிய மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டும்’ என மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஆண்டும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதில் பயிலும் மாணவர்கள் படிப்பு முடிந்த பின் இரண்டாண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி.

அதில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 30ம் தேதி நடந்தது. அப்போது மூன்றாண்டு படித்து முடித்த பின் மருத்துவமனைகளில் காலி இடங்கள் இருந்தும் பலர் பணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை.
எனவே பணியில் சேர விருப்பமில்லை என எழுதிக் கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களிடம் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831442