
காவல்துறையினர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கக் கோரி தினமும் தனக்கு மிரட்டல் வருவதாக சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக கலெக்டரின் கவனத்தை ஈர்க்க தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, சிவன் கோயில் மேல ரதவீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் பாளையங்கோட்டையில் சவுண்ட் சர்வீஸ் நடத்திவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த உளவுத்துறை தலைமைக் காவலர் ரவி என்பவரும், ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரும் கணேசனுடைய தொழிலுக்கு இடையூறு செய்ததாகச் சில வருடங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினர் அவரது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கணேசன் தொடர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
அதனால் அதிருப்தி ரவியும் ஆறுமுகமும் கணேசனுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தனக்குக் கொலை மிரட்டல் வருவது தொடர்பாகவும் கணேசன், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகார் தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருக்கிறார்.
ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டுச் செல்லுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த கணேசன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் கணேசனின் கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனைப் பிடுங்க முயன்றனர். அதற்குள்ளாக அவர் அவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டார்.
தீக்குளிக்க முயன்ற கணேசனைத் தடுத்த போலீஸார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி மண்ணெண்ணெயைக் கழுவிவிட்டனர். பின்னர் விசாரணைக்காக அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நடந்த விசாரணையின்போது, “என்னுடைய மனுவுக்கு இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மன வேதனை ஏற்பட்டது.

எனது பிரச்னை பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்தைக் கவரும் நோக்கத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டேன்” எனத் தெரிவித்தார். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், எச்சரித்து அனுப்பிவைத்தனர்.