
சென்னை: சென்னையை சேர்ந்த சிறுவன் ரயான் தொடர்ந்து 108.09 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 17 நிமிடம் ஆறு வினாடிகளில் சைக்கிளில் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
ஆறு வயதான ரயான், சமீபத்தில் தனது பெற்றோர்களுடன் டில்லியில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இவனது பெற்றோர்கள் இருவரும் இந்திய கப்பற்படையில் பணியாற்றி வருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே தங்கள் குழந்தைக்கு சைக்கிள்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தனர். எதிர்காலத்தில் பிரான்ஸில் நடக்கும் புகழ்பெற்ற டூர் டி பிரான்ஸ் என்ற சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்வது இந்த இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவனது கனவு. தட்டஜ் புகார், ஜூலியன் ஆலாபிலிப், மார்க் கேவின்டிஷ் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தய வீரர்கள் ரயானின் ரோல்மாடல்கள்.

ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் பந்தயம் சென்னையில் மிகவும் புகழ்பெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். அவருடன் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்வது தனது கனவு என்று இந்த சிறுவன் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2834160