
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில், 9 இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் தடையை மீறி செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல் வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து ஊழியர்களே கடையை மூடிவிட்டு சென்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் வெளியில் செல்வதால் தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை தியாகராயநகர், பாரிமுனை, புரசைவாக்கம், பனகல் பார்க் உள்ளிட்ட கடைவீதிகளில் பரவல் காரணமாக கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திகாராய நகரில் ரெங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய பகுதிகளில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் தடை காரணமாக வியாபாரிகளும், ஆடி மாத தள்ளுபடியில் பொருட்களை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களும் கவலை அடைந்துள்ளன. இந்நிலையில், ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக் கடை தடையை மீறி இன்று செயல்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் அங்கு வந்தனர்.
தடையை மீறி செயல்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, தாங்களே கடையை கடைப்பதாக கூறி ஊழியர்கள் கடையை அடைத்தனர். இதையடுத்து, தடையை மீறி செயல்படக் கூடாது என அதிகாரிகள் கடைக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-saravana-selvarathanam-store-violates-ban-officals-warn-velm-mur-520433.html