
புதுடில்லி: ”முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்,” என, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் கூறி உள்ளார்.
நாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1931ல் நடந்தது. பின், இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், முந்தைய மத்திய அரசு கவனத்தில் எடுக்கவில்லை.இதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தியது. இதன்படி, 2001 மற்றும் 2011ல் துவங்கப்பட்ட முயற்சிகள், பின் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது மீண்டும் கோரிக்கைகள் தொடர்ந்த நிலையில், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘எஸ்.சி., – எஸ்.டி., தவிர மற்றவர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படாது’ என, கடந்த மாதம் பார்லிமென்டில் அறிவித்தார். இதையடுத்து, பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. உ.பி.,யில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

இச்சூழலை சாதகமாக்கி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியது.
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் கூறியதாவது: முந்தைய காலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நான் தீவிரமாக போராடினேன். முலாயம் சிங், சரத் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும், இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என, எங்களிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார். இப்போதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.
அது நடந்தால் மட்டுமே, மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற முடியும்; அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2830991