
புதுடில்லி–டில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கான தடை காலத்தை மதிப்பீடு செய்வதில் மாற்றம் கோரிய மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
டில்லி சாலைகளில் 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்களை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் 2015ல் அனுமதி மறுத்தது.பழைய டீசல் வாகனங்கள் வெளியிடும் நச்சுப்புகையால் மக்களுக்கு புற்று நோய் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை மறுபதிவு செய்யக்கூடாது என, அதன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, ஹரியானாவில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பிறப்பித்த உத்தரவு:டில்லியில் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீடு தள்ளு படி செய்யப்பட்டது.எனவே, முந்தைய உத்தரவில் மாற்றங்கள் செய்வது, அதனை மறுபரிசீலனை செய்வதற்கு சமமாகும்.ஓர் உத்தரவின் மீதான மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்றால், அது உறுதி செய்யப்பட்டதாகவே கருத வேண்டும். பின் அந்த உத்தரவை, மறுபரிசீலனை செய்ய அனுமதியில்லை.எனவே, பள்ளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823706