
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதில், பலரும் உயிரிழந்த சோகமும் அரங்கேறியது.
அந்த சமயத்தில் இந்தி நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல பஸ்களை ஏற்பாடு செய்துகொடுத்தார். மேலும், கொரோனாவின் இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தன்னால் முயன்ற உதவிகளை சோனு சூட் செய்தார்.
வெளிநாடுகளில் இருந்து அவர் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கினார். இந்த செயல்களால் சோனு சூட் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நபராக உருவெடுத்தார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு சோனு சூட்டை நிறுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் சோனு சூட் இன்று சந்தித்தார். பொழுதுபோக்கு துறையை மேம்படுத்த திரைப்பட கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் திட்டம் உள்ள்ளதாக டெல்லி முதல்-மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் – சோனு சூட் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் அல்லது திறைத்துறை ரீதியிலானதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.