
புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழகத்தை சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி மற்றும் மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி ஆகியோரது படைப்புகள் சமீபத்தில் நீக்கப்பட்டன. இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து டில்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: படைப்பாளிகளின் ஜாதி, மதம் மொழி பின்புலத்தை வைத்து டில்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை. ஒருதலைபட்சமாகவும் இருக்கக்கூடாது. பாடப் பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. மொழிப்பாடத்தில் இருக்கக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தனி மனிதர்கள் அல்லது குறிப்பிட்ட சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831244