
புதுடில்லி: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை குறைப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும், மீறுவோர் மீதான நடவடிக்கை குறித்தும், மாநில ‘பார் கவுன்சில்’களுடன் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், 35 ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி போராட்டம் அறிவித்து நீதிமன்ற பணியை புறக்கணிக்கின்றனர்.
கவலை:
பாகிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு, நேபாளத்தில் நிலநடுக்கம், வழக்கறிஞரின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் போன்ற ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு வர விரும்புவோரையும் வரவிடாமல் தடுக்கின்றனர்.
இது குறித்து, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இதுபோன்ற வேலை நிறுத்தங்களை தவிர்ப்பது குறித்து இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில்கள் தங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க உத்தரவிட்டது. பரிந்துரைகள் எதுவும் வராததை அடுத்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் என்ற முறையில் மனன் குமார் மிஸ்ராவை நீதிமன்றத்துக்கு உதவும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்பாடு:
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனன் குமார் மிஸ்ரா கூறியதாவது: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்வதை குறைக்கவும், மீறி அதை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், விரிவான விதிமுறைகளை வகுக்க, அனைத்து மாநில பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு அடுத்த மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832281