
சென்னை : ”தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கொடுக்க, மத்திய அரசு தயராக உள்ளது. தேவைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு தான் வருகிறது,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின், சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி, சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், கொரோனா விழிப்புணர்வு பதாகை, புத்தகம் வெளியிடப்பட்டது.
அமைச்சர் சுப்ரமணியன் பேசியதாவது:அரசின் சார்பில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவசியமாக உள்ளது. மத்திய அமைச்சர் முருகன் மேடை ஏறியதும், ‘தமிழகத்தில் எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்ற, விபரத்தை கேட்டார். இது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தினமும், எட்டு லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கான நிர்வாக கட்டமைப்பு உள்ளது. ஆனால், இன்று, இரண்டு – மூன்று லட்சம் அளவிற்கு தான் போடப்படுகிறது.
மத்திய அரசு கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளில், 75 சதவீதத்தை, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்குகிறது. மீதி, 25 சதவீதம், தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால், தனியார் மருத்துவமனைகள், 10 சதவீதம் தான் கொள்முதல் செய்கின்றன. எனவே, 15 சதவீத தடுப்பூசிகள் தேங்கி கிடக்கும் சூழல் இருக்கிறது. மத்திய அமைச்சர் நினைத்தால், தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வினியோகித்தால், கூடுதலாக தடுப்பூசி செலுத்தலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, தலைசிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற, 2014ல் இருந்து, தேச பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, உள்கட்டமைப்பு என, பல துறைகளிலும், இந்தியா மிக பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகம் முழுதும், தொற்றால் பாதித்தது. பிரதமர் மோடி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இந்தியாவில், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதுவரை நாட்டில், 55 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கொடுக்க, மத்திய அரசு தயராக உள்ளது. தேவைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு தான் வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2827000