
சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவை நாளை(ஆக.,09) முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
* சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6: 00 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். வணிக வளாகங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதியில்லை.
* செவ்வாய்ப்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி சாலை, மால் மார்க்கெட், வீரபாண்டியார் நகர் பகுதிகளில் அனைத்து கடைகளும் மாலை 6: 00 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
* வ.உ.சி., மார்க்கெட், சின்னகடை வீதிகளில் செயல்படும் பூ , பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
* சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு வருபவர்கள் கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவார்கள்.
* கொங்கணாபுரம், வீரகனூர் வாரச்சந்தை ஆக.,23 வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், அன்றைய தினம் வரை மேட்டூர் அணை பூங்காவில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
* பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் யாருக்கும் அனுமதி கிடையாது.
*வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
*மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
* மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819013