
டோக்கியோ: ‛‛தற்செயலாக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நான், பின்னர் கடுமையாக உழைத்தேன்” என டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது, நாட்டிற்காக விளையாடுவது, பதக்கம் வெல்வது எனது வாழ்க்கையில் அங்கமாக இருந்தது இல்லை. எனது கிராமத்திலும் சரி, குடும்பத்திலும் யாரும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றது இல்லை. மைதானத்திற்கு சென்று ஈட்டி எறிதலில் பங்கேற்றது தற்செயலானது. இதன் பிறகு நான் கடுமையாக உழைத்தேன். எனக்கு அனைவரும் ஆதரவு அளித்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் எனது சிறப்பான திறமையை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியதால், தங்கம் உறுதியாகும் வரை ஓய்வெடுக்கவில்லை. கடைசி வீரர் விளையாடும் வரை பார்த்துவிட்டு, தங்கம் உறுதியான பிறகே கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். ஒரு போட்டியில் மனரீதியாக தயாராக வேண்டியது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819029