
கோவை: பக்கத்திலுள்ள பாலக்காட்டில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், கோவை மாவட்ட மக்களிடம் பயமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. ஆனால், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் வேகம் மிகவும் குறைவாகவுள்ளது.
கேரளாவில் ஓணத்துக்குப் பின், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தைத் தாண்டியிருப்பதால், அடுத்த, 10 நாட்கள் தமிழக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். கோவைக்கு மிகவும் அருகிலுள்ள பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில், 2,562 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருவதற்கு, கோவை மாவட்டத்தில் முக்கியமான ஏழு வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் என்னதான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை குறையவில்லை.
கொரோனா எக்ஸ்பிரஸ்
கேரளாவிலிருந்து கோவைக்கு ரயில்களில் வருவோருக்கும் சான்றுகள் சரி பார்ப்பதும், ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்ட் எடுப்பதும் பெயரளவுக்கே நடக்கிறது. ரயில்களில் தினமும் வரும் பல ஆயிரம் பேர், மற்ற ரயில் பயணிகளுடன் கலந்து வெளியேறிவிடுவது அதிகமாகவுள்ளது. ஒரு நாளுக்கு இப்படி பல ஆயிரம் பேர், கோவைக்குள் ஊடுருவி விடுவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இரண்டு நாட்கள், மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில், தமிழகத்திலேயே சென்னையை விட அதிகமாக கோவைக்கு அதிகளவு தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு ஒதுக்கீடு செய்தாலும், முறைப்படி வினியோகம் செய்யாமல், செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசியில், 75 சதவீதம், அரசு மருத்துவமனைகளுக்கும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் (சிஎஸ்ஆர்) ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பதே, தேசிய அளவிலான நடைமுறை. அதே அடிப்படையில்தான், இங்கும் ஒதுக்கப்படுவதாக கோவை கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.

இருக்கு… ஆனா இல்லை!
நேற்று முன்தினம் கலெக்டர் தந்த புள்ளி விபரங்களின்படி, கோவையில் இதுவரை 22 லட்சத்து15 ஆயிரத்து 472 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு சார்பில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை மட்டும் 15,64,778; தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கியது 1,43,580 டோஸ்; தனியார் மருத்துவமனைகள் சொந்தமாக வாங்கியது 2,13,865 டோஸ் தடுப்பூசி.
அவர் கூறும் கணக்குப்படி, அரசு தரப்பில் 71 சதவீதமும், தனியாருக்கு 29 சதவீதமும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே தேசிய அளவிலான நடைமுறைக்கு முரணான விகிதாசாரம். இதனால், தமிழக அரசு ஒதுக்கும் தடுப்பூசியை அன்றன்றைக்கு முறையாக சுகாதாரத்துறை வினியோகம் செய்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில், கோவைக்கு அதிகளவிலான தடுப்பூசி ஒதுக்கப்பட்டாலும், பல நாட்களில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி இல்லை என்று மக்களைத் திருப்பி அனுப்புவதே அதிகமாக நடக்கிறது. மாவட்டத்துக்கு வரும் மொத்த ஒதுக்கீட்டை, உடனுக்குடன் பிரித்து வினியோகிக்காமல், சுகாதாரத்துறை அதிகாரிகள் முடக்கி விடுவதாகவும் புகார் கிளம்பியுள்ளது. ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசியை உடனுக்குடன் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தடுப்பூசி ஒதுக்கீட்டில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, ஏதாவது ஒரு வகையில் பயன் பெறுவதற்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் யாராவது முயற்சி செய்தார்களா என்பதை கலெக்டர் தீவிரமாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.
கலெக்டர் சமீரன் கூறுகையில், ”தடுப்பூசி ஒதுக்கீட்டில் தேசிய அளவிலான நடைமுறைதான் இங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பேயில்லை.” என்றார். தினமும் கோவைக்கு வரும் தடுப்பூசி எவ்வளவு, கையிருப்பு விபரம் போன்றவற்றை மக்களுக்குத் தெரிவிப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.இல்லாவிடில் இது ஆட்சியருக்கு மட்டுமில்லை; ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்திவிடுமென்பது நிச்சயம்!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832219