
புதுடில்லி: கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இந்தியா – சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 12வது சுற்று பேச்சு நேற்று துவங்கியது. இதில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு, சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் முகாமிட்டுள்ளன.பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.
அதே நேரத்தில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெறுவதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.இது தொடர்பாக, இரு ராணுவ எல்லை படைப் பிரிவின் தலைவர்கள் இடையேயான 12வது சுற்று பேச்சு நேற்று காலை துவங்கியது. சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடக்கிறது.

கடந்த 14 மாதங்களாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் யாங்க் யீயுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். எல்லைப் பிரச்னை, இரு தரப்பு உறவுக்கு பெரும் தடையாக உள்ளதாக ஜெய்சங்கர் அப்போது குறிப்பிட்டார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814114