
புல்தானாவில் லாரி கவிழ்ந்து சாலை போடும் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை, புல்தானாவில் லாரி கவிழ்ந்து சாலை போடும் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை போடும் தொழிலாளர்கள்மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் மும்பை – நாக்பூர் சாம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சாலை பணிகளுக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்றது. லாரியில் 16 தொழிலாளர்களும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட சென்றனர்.லாரி கவிழ்ந்ததுஇதில் லாரி நேற்று மதியம் 12 மணியளவில் சிந்த்கேட்ராஜா – மேகர் ரோட்டில், துசார்பிட் கிராமப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. தற்காலிகமாக போடப்பட்ட அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்தது. ஆனாலும் டிரைவர் வேகமாக லாரியை ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதில் சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் இறங்கிய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
சிலர் கவிழ்ந்த லாரியில் இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கினர்.13 பேர் பலிஇந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொது மக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஜல்னா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிலர் சிந்த்கேட்ராஜா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களில் சிலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலும், மற்றவர்கள் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளையில் சிறுமி உள்பட 3 பேர் காயத்துடன் உயிர் பிழைத்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. விபத்தில் சிக்கிய டிப்பர் லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த கோரவிபத்து குறித்து புல்தானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி கவிழ்ந்து 13 தொழிலாளர்கள் பலியான சம்பவம் மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.