
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்தும், மண் சரிந்த சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். மும்பை கிழக்கு மற்றும் மத்திய புறநகர் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்தது.

மும்பையில், பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஒரு சில இடங்களில் 200 மி.மீ.,க்கு மேல் மழை பதிவானது.

இந்நிலையில், செம்பூர் பகுதியில் உள்ள பரத் நகரில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

விக்ரோலி பகுதியில்,இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பந்தப் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பிரதமர் ஆறுதல்
18 பேர் உயிரிழந்தது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது மனம் உள்ளது. காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டி கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804666