
கொரோனாவால் வேலை கிடைக்காத சகோதரிகள் இரண்டு பேர் இறந்துபோன தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்துவிட்டுத் தற்கொலைக்கு முயன்றனர்.
கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் மும்பையில் வேலை வாய்ப்புக்களை இழந்து தவிக்கின்றனர். மும்பையில் புறநகர் ரயில் இருந்தால் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். ஆனால் இப்போது புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் மும்பைக்குள் சென்று வேலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். மும்பை அருகில் உள்ள விராரில் புரோக்ளின் பார்க் என்ற அபார்ட்மென்ட்டில் வசித்தவர் ஹரிதாஸ் சஹர்கர்(70). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் அவர்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹரிதாஸ் இறந்துவிட்டார். அவர் இறந்ததை வெளியில் சொன்னால் கொரோனா சோதனை செய்து நம்பை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்று பயந்து சகோதரிகள் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. நான்கு நாள்கள் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். உடல் படுக்கை அறையில் இருக்கும். சகோதரிகள் இரண்டு பேரும், அவர்களின் வயதான தாயாரும் முன் அறையில் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உடல் அழுக ஆரம்பித்ததால் நாப்தலின் போன்ற பொருட்களை வைத்து துர்நாற்றம் வெளியில் வருவதைக் கட்டுப்படுத்தினர். மேற்கொண்டு வருமானம் இல்லாமல் வாழ முடியாது என்று கருதி சகோதரிகள் இரண்டு பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இரண்டு பேருக்கும் வேலை இல்லை. வருமானத்திற்கும் வழியில்லை. பல இடங்களில் வேலை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தந்தை இறந்துவிட்ட நிலையில் இனி எப்படி உயிர்வாழ்வது என்று தெரியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டனர். சகோதரிகள் இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் நாப்தலின் சாப்பிட்டனர். ஆனால் அதில் இரண்டு பேரும் சாகவில்லை. இதனால் கை மற்றும் உடலின் பல பகுதியில் கத்தியால் வெட்டிக்கொண்டனர். பின்னர் இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையால் இருவரும் தூங்கிவிட்டனர். சிறிது நேரம் கழித்து வித்யா என்ற ஒரு சகோதரி எழுந்தார். அவர் தனது மற்றொரு சகோதரியான ஸ்வப்னிலை எழுப்ப முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மட்டும் ஆட்டோவில் ஏறிச்சென்று அங்குள்ள கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் அங்குள்ள அர்னாலா கடற்கரையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு பெண் கடலை நோக்கி சென்றார். அங்கு இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்ட போது அவர் ஸ்வப்னில் என்று தெரிய வந்தது. உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்த போது தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நானும் எனது சகோதரியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். எனது சகோதரி ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். எனது தந்தையும் நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து வீட்டில் உடல் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை ஸ்வப்னிடம் காட்டியபோது அது தனது சகோதரிதான் என்று தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து சென்று வீட்டில் இருந்த ஹரிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஸ்வப்னில் மற்றும் அவரது தாயார் பெண்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.