
மும்பையில் நேற்று இரவிலிருந்து மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பையில் சனிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவிலிருந்து ஞயிற்றுக்கிழமை அதிகாலை வரை எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இம்மழைக்கு 33 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இம்மழை ஞயிற்றுக்கிழமை இரவும் தொடர்ந்து பெய்தது. திங்கள் கிழமை காலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத்தொடங்கி விடாது பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவை சிறிது நேரம் தொடங்கப்பட்டு பின்னர் மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. பாண்டூப் மற்றும் விக்ரோலி இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. தானே ரயில்வே கார்ஷெட்டிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் ரயில்களை கார்ஷெட்டில் இருந்து வெளியில் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாலாசோபாராவில் சாக்கடை குழியில் விழுந்த 4 வயது சிறுவனை இன்னும் மீட்க முடியவில்லை.
உல்லாஸ் நகரிலும் சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்தான். மும்பையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. மும்பை மட்டுமல்லாது நவி மும்பையிலும் மழை விடாது பெய்து வருகிறது. நவி மும்பையில் 24 மணி நேரத்தில் 1600 மிமீ அளவுக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்துள்ளது. ரபாலே ரயில் நிலையம் அருகே இருந்த ஒரு கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அக்கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் உட்பட 70 பேர் கட்டிடத்தின் மாடிக்குச் சென்று தங்களை பாதுகாத்துக்கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 10 தன்னார்வலர்கள் 250 அடி கயிற்றை கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். கழுத்து அளவுக்கு தண்ணீர் சேர்ந்து விட்டது. 3 மணி நேரம் போராடி 80 வயது முதியவர் முதல் 3 மாத குழந்தை என அனைவரும் மீட்கப்பட்டனர். திங்கள் கிழமை அதிக அளவு தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. மீனவர்கள் 22ம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும், பொது மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பழுதடைந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை தீவிரமாக கண்காணிக்கும் படி முதல்வர் உத்தவ்தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.