
திருவனந்தபுரம் : வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற பெண், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு விஸ்மயாவை துன்புறுத்தி கொன்றதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்’ என, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சமீபத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த காந்திய அமைப்புகள், வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுத்தது. இதில், கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று பங்கேற்றார். காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 வரை, கவர்னர் மாளிகையில் அவர் உண்ணா விரதம் மேற்கொண்டார்.கவர்னரின் உண்ணாவிரதத்திற்கு பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
‘கேரள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, அரசுக்கு எதிராக, மாநில தலைவரான கவர்னரே உண்ணாவிரதம் இருப்பது, நாட்டின் நிர்வாக வரலாற்றில் அரிதான சம்பவம்’ என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வி.முரளீதரன் தெரிவித்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2802682