
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 3 வேளாண் சட்டங்களும் வேளாண்மைக்கு எதிரானவை. நமது நாட்டின் வேளாண்மை வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. விவசாயிகள் நலனுக்கு உகந்ததாக இல்லாத இந்த 3 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 385 நாட்களாக, இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். நாட்டிற்கும், வேளாண்மைக்கும், மாநில விவசாயிகளுக்கும் எந்த பலனும் இல்லை.

சட்டசபை தேர்தலின் போது, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதனை நிறைவேற்றும் வகையில், தீர்மானம் முன்மொழியப்பட்டு உள்ளது.
வேளாண் சட்டங்கள் விளைபொருட்களை வாங்கும் தனியாருக்கே சாதகமாக உள்ளது. இந்த சட்டங்களால் வேளாண்மை, பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். வேளாண்மையை அழிக்கும் வகையில் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசியதா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு அ.தி.மு.க., ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்பிற்கு பிறகு பதில் கூறுவதாக கூறினார்.
தொடர்ந்து துரைமுருகன், அ.தி.மு.க., ஆட்சியில் எத்தனை முறை வேளாண் சட்டங்கள் குறித்து கடிதம் எழுதப்பட்டது என்றார்.
அதற்கு, பன்னீர்செல்வம்,
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
இதுதான் என் தற்போதைய நிலைமை
தன்னுடைய நிலைமை என்னவென்று அவை முன்னவருக்கு தெரியும் எனக்கூறினார்.
வெளிநடப்பு
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., மற்றும் தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வழக்குகள் வாபஸ்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது அ,தி,மு,க., அரசு தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்து உள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832339