
அடுத்த வாரம், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளிடம் மீண்டும் கருத்து கேட்க, சென்னையில் இன்று(ஆக.,8) அவசர கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக, வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, கடந்த மாதம், 18ல் இருந்து, ஒரு வாரத்திற்கு துறை அதிகாரிகளும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆங்காங்கே இருக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்து கேட்டனர். இந்த கருத்துக்கள் அடிப்படையில், வேளாண் பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே நடந்த கூட்டங்களில் சிறந்த கருத்துக்களை கூறிய விவசாய சங்க பிரதிநிதிகளை, மாவட்டத்துக்கு ஒருவர் என, 38 பேரை தேர்வு செய்து, அவசரமாக சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, எழிலகம், வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில், இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தோடு, துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, வேளாண் மாதிரி பட்ஜெட்டை, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் காட்டி, அதில் விடுபட்ட விஷயங்களை சுட்டிக்காட்டுமாறு கேட்க உள்ளனர்.அவர்கள் கூறும் விஷயங்களையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்க, அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
– நமது நிருபர் —
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818956