
2019-2020 நிதியாண்டில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 429 கோடி நன்கொடை பெற்றுள்ளன.
புதுடெல்லி,
2019-2020 நிதியாண்டில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை கேட்டு, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது.
அதில் கிடைத்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:-
2019-2020 நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் மொத்தம் ரூ.3 ஆயிரத்து 429 கோடியே 56 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன. இவற்றில், பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 4 தேசிய கட்சிகள் மட்டும் பெற்ற தேர்தல் பத்திரங்கள் 87.29 சதவீதம் ஆகும்.
அதாவது, பா.ஜனதா 2 ஆயிரத்து 555 கோடியும், காங்கிரஸ் ரூ.317 கோடியே 86 லட்சமும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.100 கோடியே 46 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் ரூ.20 கோடியே 50 லட்சமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளன.
தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பெற்ற தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 441 கோடியே 32 லட்சம் ஆகும்.
2019-2020 நிதியாண்டில் அரசியல் கட்சிகளின் மொத்த வருமான விவரங்களும் தெரிய வந்துள்ளன. பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.4 ஆயிரத்து 758 கோடி.
பா.ஜனதா மட்டும் ரூ.3 ஆயிரத்து 623 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.682 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.143 கோடியும் வருவாய் ஈட்டி உள்ளன. முந்தைய நிதியாண்டை விட பா.ஜனதாவின் வருமானம் 50.34 சதவீதமும், தேசியவாத காங்கிரசின் வருமானம் 68 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆனால், காங்கிரசின் வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளது.
அதே சமயத்தில், பா.ஜனதா ரூ.1,651 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.998 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.107 கோடியும் செலவழித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் வருவாயை விட அதிகமாக செலவு செய்துள்ளது.