ஜெனிவா: பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இயல்பு நிலை திரும்பியதாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால், உலகம் முழுவதும், கோவிட் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 9 வாரங்களாக கோவிட் பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், கடந்த வாரம் அந்த நிலை மாறியிருக்கிறது. கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கோவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகம். அதேபோல், புதிதாக தொற்று பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
![]() |
கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகி உள்ளது. டெல்டா வகை வைரஸ் தொற்று பரவலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட மக்கள் கோவிட் நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் இயல்பு நிலைக்குத் திரும்புவது சாத்தியம் ஆகாது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2802873