
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பதிவு: ஜூலை 18, 2021 14:56 PM
கொழும்பு,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2-ம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது.
இதன்படி இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்த தொடர் முதலில் கடந்த 13-ந்தேதி தொடங்க இருந்தது. இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அதிகரிப்பு காரணமாக 5 நாள் தாமதமாக இப்போது தொடங்குகிறது.
கேப்டன் ஷிகர் தவானுடன் தொடக்க ஆட்டக்காரராக பிரித்வி ஷா இறங்குகிறார். முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே வலுசேர்க்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்துவீச்சை தொடங்க உள்ளது.
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, பதும் நிசாங்கா, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, பானுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, உதனா, லக்ஷன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, அசலங்கா