
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் ஆகியன இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வுக்கோரி 3 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கைகள் பின்வருமாறு,
1) தமிழர்களின் தாயகமான தமிழீழம் அமைய வழி காண வேண்டும்.
2) ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறைக்கு ஈடுசெய் நீதியைத் தேடுவது.
3) ஈழத் தமிழர்களின் தன்முடிவுரிமை கோரிக்கையை ஆதரிப்பது. ஆகிய 3 கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரனாயி விஜயன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதன் முதற்கட்டமாக கேரள முதலமைச்சரை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என். ஏ. கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Source: https://tamilwin.com/article/discussion-on-the-issue-of-eelam-tamils-1628620949