கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து 275க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது, எனினும், கடல் ஆமை இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ‘
கூடுதலாக, சுமார் 45 டொல்பின்களும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடலில் இரசாயன மாசு இருப்பதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. உள்ளூர் கல்வியாளர்கள் இந்த பிரச்சினைக்கான காரணங்களை வழங்கத் தவறிவிட்டனர்.
எண்ணெய் கசிவு காரணமாக அதிகமான மீன்கள் உயிரிழக்க கூடும் எனவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 02 முதல் 03 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காற்று துவாரத்திலிருந்து எண்ணெய் வெளியேறுகிறது. இதனை தடுக்க முடியும்.
எனினும், பிரச்சினையைத் தீர்க்க கடினமான காலம் முடியும் வரை அரசாங்கம் காத்திருக்கிறது.
“நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது, எண்ணெய் கசிவை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
Source: https://tamilwin.com/article/oil-spill-on-express-pearl-ship-1626989579