மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட மூவர் கும்புறுமூலை இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், இருதயபுரம், செட்டிப்பாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது இவர்கள் மூவரும் மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியே மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களுக்கும் ஐஸ் போதைப்பொருள் விநியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்களுடன் தொடர்புடைய உள்ளூர் முகவர்கள், வியாபாரிகள், பாவனையாளர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வியாபாரியிடன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட வியாபாரி உட்பட மூவரையும், வாகனத்தினையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனைப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Source: https://tamilwin.com/article/popular-drug-dealer-nabbed-in-batticaloa-1626651127