
ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை வெள்ளிக்கிழமை அன்று 2.12% வரை குறைந்தது. ஃப்யூச்சர் குழுமத்தின் ஆறு நிறுவனப் பங்குகளின் விலை குறிப்பிடத்தகுந்த அளவு விலை இறக்கம் அடைந்தன.
ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தக் காரணம் என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.


Also Read
IPO வெளியிடும் முடிவு, ₹10,600 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை; நெருக்கடியில் ஃப்ளிப்கார்ட்!
கடந்த சில ஆண்டுகளாகவே ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்தது. கொரோனா நோய்த் தொற்று வந்தபின் அதாவது, 2020-ல் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கு வருமான இழப்பை சந்தித்ததால், ஃப்யூச்சர் குழுமத்தின் கடன் சுமை மேலும் அதிகரித்தது. அதனால் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் போட்டது. பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பு ரூ.24,713 கோடி என மதிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், ஃப்யூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு விற்கக் கூடாது என அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் வழக்கு தொடுத்தது. “ஃப்யூச்சர் கூப்பன் என்னும் நிறுவனத்தில் 49% பங்குகளை, கடந்த வருடம் நாங்கள் வாங்கினோம். ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்துக்கு 7.3% பங்குகள் இருக்கிறது. அதாவது, ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் மறைமுகமாக 5% பங்குகள் எங்கள் வசம் இருப்பதால், அந்த நிறுவனத்தை எங்கள் அனுமதி இல்லாமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கக் கூடாது. தவிர, ஃப்யூச்சர் நிறுவனத்தை எங்கள் அனுமதி இல்லாமல் யாருக்கும் விற்க மாட்டோம் என ஃப்யூச்சர் நிறுவனம் எங்களுக்குக் கையெழுத்திட்டுத் தந்துள்ளது. அதனால் அந்நிறுவனத்தை ரிலையன்ஸுக்கு விற்கும் பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்’’ என சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் அமேசான் வழக்கு தொடுத்தது.

ஆனால், ஃப்யூச்சர் நிறுவனத்தை ரிலையன்ஸுக்கு விற்க முடியாவிட்டால், ஃப்யூச்சர் குழுமத்தின் சொத்துகளை விற்றுதான் கடன் செலுத்தவேண்டி இருக்கும். தவிர, 29,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என ஃப்யூச்சர் குழுமம் வாதாடியது. டெல்லி உயர் நீதிமன்றம் அமேசான் தொடர்ந்து வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது.