பிரித்தானியாவில், வரும் திங்கட்கிழமை (ஜூலை 19) முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது முடிவுக்கு எதிராக 1,200 அறிவியலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அரசு, மக்களுக்கு மொத்தமாக கொரோனா வரவிட்டு, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கிரிமினல் திட்டம் போட்டிருப்பதாக அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள் அவர்கள்.
1,200 அறிவியலாளர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம் ஒன்றில், கொரோனா பரவல் இன்னமும் மோசமாக இருக்கும் நிலையில், போரிஸ் ஜான்சனின் முடிவு அறிவியல் பூர்வமானது அல்ல என விமர்சித்துள்ளார்கள்.
கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு, மக்கள் பாதுகாப்பான ஒரு நிலைமையை எட்ட வேண்டுமானால், இன்னமும் பல மில்லியன் வயது வந்தோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டாகவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில், ஏப்ரலுக்குப் பின் முதன்முறையாக, நேற்று மட்டும் பிரித்தானியாவில் 50 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதுடன், ஆறு மாதங்களில் முதன்முறையாக ஒரு வாரத்தில் 36,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வது சரியல்ல என்று கூறும் அறிவியலாளர்கள், குளிர் காலத்தில் பிற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்களாலும் தொற்று ஏற்படும் பட்சத்தில், தடுப்பூசிகளின் திறன் எப்படி இருக்குமோ தெரியாது என்கிறார்கள்.
ஆகவே, மொத்தமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்படாவிட்டாலும், மீண்டும் மாஸ்க் அணிதல் முதலான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.
Source: https://news.lankasri.com/article/adviser-warns-rough-winter-ahead-says-lockdown-1626241270