
பிரித்தானியாவில் காணாமல் போனதாக தேடப்பட்ட 6 வயது சிறுமி, வயல்வெளியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த நிலையில் பொலிஸ் ஹெலிகாப்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் டெவோன் கவுன்டியில் உள்ள வடக்கு டெவோன் (North Devon) பகுதியிலிருந்து, கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பொலிஸாருக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில், தங்கள் 6 வயது மகள் தங்கள் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போனதாக ஒரு பெற்றோர் பதறியநிலையில் உதவியை கேட்டுள்ளனர். அந்த வீட்டைச் சுற்றி முற்றிலும் வெறும் வயல்வெளியாக இருப்பதால் அவர்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர்.
தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக, அப்பகுதிக்கு சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு தேசிய பொலிஸ் விமான சேவை (NPAS) அழைக்கப்பட்டது.
NPAS ஹெலிகாப்டரின் உதவியுடன், பண்ணை வீட்டிலிருந்து சுமார் அரை மைல் தூரத்தில் (800 மீட்டர்) காணாமல் போன அந்த சிறுமியை 10.40 மணியளவில் கண்டுபிடித்து பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.

ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த சிறுமி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதை காட்டும் ஒரு வீடியோவை தேசிய பொலிஸ் விமான சேவை (NPAS) தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று, ஹெலிகாப்டரில் இருக்கும் அகச்சிவப்பு கமெராவை (Infra-red Camera system) பயன்படுத்தி பண்ணை வீட்டை சுற்றி உள்ள வயல்வெளியில் தேடினர். அப்போது ஒரு திறந்த வெளியில் மனித தோற்றத்தில் ஒரு கருப்பு உருவம் தெரிந்தது.
அது வேறு யாரும் அல்ல, காணாமல்போன சிறுமியே தான். அவர் அந்த இடத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தது அந்த காட்சிகளில் தெரிகிறது. பிறகு, அந்த இடத்திற்கு காரில் சென்ற பொலிஸார், சிறுமியை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேசிய பொலிஸ் விமான சேவை (NPAS) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள 14 தளங்களை கொண்ட நெட்வொர்க்கை செயல்படுத்துவதாகவும், எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Source: https://news.lankasri.com/article/police-helicopter-find-6-old-girl-missing-devon-uk-1628716275