
புதுடில்லி-தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலிபான்கள் பெயர் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துள்ளது. அங்கிருந்து வெளியேற ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் மற்ற நாட்டினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், காபூல் விமான நிலைய வாயிலில் சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.கடந்த 15ம் தேதி காபூலை தலிபான்கள் கைப்பற்றியபோது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், ‘தலிபான்கள் அல்லது ஆப்கனின் எந்த குழுவோ, தனிநபர்களோ, மற்ற நாடுகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, 27ம் தேதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ‘மற்ற நாடுகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் குழுக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தலிபான்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

ஐ.நா.,வுக்கான முன்னாள் இந்திய துாதர் சையது அக்பருதீன், இதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் இந்த மாதம் இந்தியா வகித்து வருகிறது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833491