வாரணாசி: கோவிட்டை கட்டுப்படுத்த உ.பி., அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தனது தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, பனாரஸ் ஹிந்து பல்கலையில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவ பிரிவு, கோடவுலியாவில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்தம், கங்கை நதியில் நவீன படகுகள் மூலம் சுற்றி பார்க்கும் திட்டம் , வாரணாசி- காசிப்பூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வீட்டு தோட்ட வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழி்லநுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றம் மாநாட்டு மையம் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார். ரூ.744 கோடி மதிப்பிலான திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அவர், ரூ.839 கோடி மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் பேசுகையில், கோவிட் வைரசை எதிர்த்து, இந்தியாவின் மிகப்பெரிய உ.பி., அரசு வலுவுடனும் சிறப்பாகவும் செயல்பட்டது. வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை ஈடு இணையில்லாதது. நாட்டில் அதிகம் பேருக்கு, உ.பி.,யில் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.கோவிட்டை எ திர்த்து போராடியவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் இலவச தடுப்பூசி. இதுவே அரசின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2802879