
ஸ்ரீநகர்-பொய்த் தகவல்களை பரப்பி, மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதுடன், பயங்கரவாதத்துக்கு இளைஞர்களை ஈர்க்கும் ‘சைபர்’ பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில், ஜம்மு – காஷ்மீர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பொய் தகவல்ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. இருந்தாலும் ஆங்காங்கே அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து, ஜம்மு – காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது:நேரடியாக சண்டையிடும் பயங்கரவாதிகளைவிட இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் பொய் தகவல்கள் பரப்பும் சைபர் பயங்கரவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.’ஒயிட் காலர் ஜிகாதிகள்’ என அழைக்கப்படும் இவர்கள், யார், எங்குள்ளனர் என்பது தெரியாது.சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதே இவர்களது முக்கிய இலக்கு. குறிப்பாக, மத ரீதியில் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பரப்புகின்றனர்.
இதைத் தவிர, சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களை பயங்கரவாதத்துக்கும் ஈர்த்து வருகின்றனர். இவ்வாறு பொய் செய்திகளை பரப்பி வரும் ஐந்து பேரை சமீபத்தில் கைது செய்துள்ளோம். இது போன்ற சைபர் பயங்கரவாதிகளை வேட்டையாடுவது சுலபமான விஷயமல்ல. ஆனால் அதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

புதிய திட்டம்
சமூக வலைதளங்களில் பொய்த் தகவல்கள் பரப்புவது போன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுவதைக் கண்டுபிடிக்க, சமீபத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். அதன்படி இதில் இணைந்துள்ளோர், சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய் செய்திகள் உள்ளிட்ட தகவல்களை போலீசுக்கு தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833480