
கடலோடு போராடிக்கொண்டிருப்பவன், இயற்கையை எதிர்கொண்டு கடலுக்கு செல்பவன், சூழலுக்கு தகுந்தாற்போல் தான் வலைவிரிக்கவே முடியும். இப்படியெல்லாம் சட்டம் போட்டால் எங்களால் வாழவே முடியாது. கடல்தோன்றிய காலத்திலிருந்தே சுதந்திரமாக மீன் பிடித்து வருகிறோம். இப்படியொரு சட்டம் இப்போது எதற்கு?
“உலக வரலாற்றிலேயே மிக மோசமான சட்டம்!… ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி வருமானத்தை இந்திய நாட்டுக்கு ஈட்டித் தருகிறோம்…ஆனால் அரசாங்கம் சொந்த நாட்டு மக்களை இப்படியா நடத்துவார்கள்..? பன்னாட்டு கப்பலும், எங்களின் கட்டுமரமும் ஒன்னா?” என்று கொந்தளிக்கிறார் தென்னிந்திய மீனவர் நலசங்கத் தலைவர் கு.பாரதி.
“நாங்கள் உழைத்து… உழைத்து… வியாபாரிகளுக்கும், டீசலுக்கும் காசை முழுவதுமாக பறிகொடுத்துவிட்டு, வெறுங்கையை வீசிக்கொண்டு செல்லும் நிலையில் இருக்கக்கூடிய இந்த கால கட்டத்தில்… எங்களுக்கு எந்த உதவியும் செய்யாத ஒன்றிய அரசு, எங்கள் வாழ்வில் புகுந்து எங்களை மேற்கொண்டு அல்லல்படுத்தும் வேலையைச் செய்தால் நாங்கள் என்னதான் செய்ய முடியும்? போராடுவதை தவிர?” என்று குமுறுகிறார் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ்.
“கடலில் மீன் பிடிப்பது குற்றமா? மீன் பிடித்து, நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவது, வேலைவாய்ப்பை வழங்கியது என நாங்கள் செய்வது எல்லாமே குற்றமா?” என ஆதங்கப்படுகிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசு.

இப்படி, இந்திய ஒன்றிய அரசை நோக்கி மீனவர் சங்க பிரதிநிதிகள் எல்லாம் கேள்விக்குரல் எழுப்புவதற்கும், போராட்டத்தில் குதிப்பதற்கும் காரணம், தற்போது இந்திய அரசு நிறைவேற்றவுள்ள “இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா – 2021” (The Marine Fisheries bill 2021).
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 19) தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை 20 அமர்வுகள் என மொத்தம் 19 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மருத்துவம்,மின்சாரம், பெட்ரோலியம், பென்சன், ராணுவம் போன்ற பல்வேறு துறைகள் சம்மந்தமாக சுமார் 40 புதிய மற்றும் சட்டதிருத்த மசோதாக்கள் மற்றும் 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒரு சட்டம் தான் இந்திய கடல் மீன்வள சட்டம்.
இந்த சட்ட முன்வரைவு வெளியானதிலிருந்தே இந்திய மீனவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டங்களிலும், இப்புதிய சட்ட மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக கபளிகரம் செய்யும் என மீனவர்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். காசிமேடு முதல் ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த மீனவர்களும் கறுப்புகொடி கட்டி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட தயாராகியிருக்கிறது இந்திய கடல் மீன்வள சட்ட மசோதா – 2021.

மீனவர்களுக்காக கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தை, மீனவர்களே ஏன் எதிர்க்கிறார்கள்? என்ன காரணம் என்பதை அறிய மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் விளக்கம் கேட்டோம். அவர்கள் அளித்த பதில்கள் இங்கு.
தென்னிந்திய மீனவர் நலசங்கத் தலைவர், கு.பாரதி:
“ஒன்றிய அரசு கொண்டுவரக்கூடிய இந்த சட்டம், தமிழ்நாட்டிலிருக்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடி தொழிலையும் அழிக்கக்கூடிய வகையில் உள்ளது. குறிப்பாக, நம் மீனவர்கள் பயன்படுத்துகிற விசைப்படகுகள், 10 எச்.பி. ஃபைபர் படகுகள், நாட்டுப் படகுகள் போன்ற சாதாரண படகுகளை பன்னாட்டு கப்பல்களுக்கு இணையாக மீன்பிடி கப்பலாக கருதுகிறது அரசாங்கம்.
அதன்படி முதலில், 1958, வணிக கப்பல் சட்டத்தின் படி எல்லா படகுகளையும் பதிவு பண்ண சொல்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட பின் மீன் பிடிக்க செல்லும் ஒவ்வொரு முறையும், அரசிடம் அனுமதி பெறவேன்டும் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? மீனவர்கள் எப்போது கடலுக்கு செல்லுவோம் என்பது எங்களுக்கே தெரியாது, மீன் தென்பட்டால் எப்போது வேண்டுமானாலும் செல்வோம். அப்படியே அனுமதி கேட்கவேண்டுமென்றாலும், தமிழ்நாட்டின் 14 கடலோரா மாவட்டங்களில், 608 மீனவ கிராமங்கள் உள்ளது. அதில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளது. இவையெல்லாம் நடைமுறை சாத்தியமாக எங்களுக்கு தோணவில்லை.
இரண்டாவதாக, காலங்காலமாக சுதந்திரமாக மீன்பிடித்து வரும் மீனவர்களின் அனைத்து வகையான படகுகளும் இனி கட்டணம் செலுத்திதான் மீன் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். இப்படி, சொந்த நாட்டிலேயே பாட்டன் முப்பாட்டன் தலைமுறையாக மீன்பிடித்து வாழ்ந்து வரும் சொந்த நாட்டு மக்களிடம், மீன்பிடிக்க கட்டணம் வசூலிப்பது என்பது உலக வரலாற்றிலேயே எந்த நாட்டிலும் இல்லாத மிக மோசமான ஒரு கறுப்பு சட்டம்!

மூன்றாவதாக, கடலை நிர்வாக வசதியாக பிரிக்கிறார்கள். முதல் 12 மைல் அண்மைக் கடல் என்றும், அடுத்த 200 மைல் சிறப்பு பொருளாதார மண்டலம்(EEZ) என்றும், அதற்குமேல் பன்னாட்டு மீன்பிடி கப்பல் பகுதி என்றும் வரையறுக்கிறார்கள். இதில், 12 மைல் வரையில் தான் நம் மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி. அதற்குமேல் கட்டணம், அபராதம், சிறை தண்டணை என்கிறார்கள். இந்த அபராதத்தொகை குறைந்தபட்சம் 5,000 முதல் 20 லட்சம் வரை விதிக்கப்படும், ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என்கிறார்கள். நீதிமன்றம் சென்றால் கூட நம்மால் எதிர்த்து வாதாட முடியாது, கட்டணம் வசூலிக்கும் அதிகாரி சொல்வது தான் செல்லுபடியாகும். இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல்!
மேலும் இந்த மசோதாவில் சொல்லப்படும் ஒரு விஷயம், மீன்பிடி தடை பகுதிகள். அதாவது சாதாரணமாக மீன்களின் இனப்பெருக்க காலத்தில் தான் மீன்பிடி தடைகாலம் விதிக்கப்படும். ஆனால், இந்த சட்டத்தில் அரசாங்கம் எந்தப்பகுதியை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மீன்பிடி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க முடியும் என்று உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் கடலின் வளங்கள். இந்திய அரசை பொறுத்தவரையில் கடல் என்பது மீன்பிடி தொழிலுக்கு மட்டுமல்லாமல், கடலில் இருக்கும் பெட்ரோல், ஹைட்ரோகார்பன், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை எடுப்பதற்கான பகுதியாக பார்கிறார்கள். அதன்படி தான், மரக்காணம் முதல் நாகப்பட்டினம் வரை கடல்பகுதியில் 200 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த அனுமதியை வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. எனவே, இந்தமாதிரியான பணிகள் செய்யும்போது மீனவர்கள் குறுக்கிடாமல் இருக்கவே உள்நோக்கமாக இந்த தடைப்பகுதியை அறிவிக்கிறார்கள். மீன்பிடிக்க அனுமதி இல்லையாம் ஆனால் கடலில் சுரங்கம் அமைக்க, கனிம வளங்கள் எடுக்க ஆராய்ச்சி செய்ய மட்டும் அனுமதி வழங்கப்படுமாம்.
ஆகவே, இந்த கடல் மீன்வள சட்ட மசோதாவின் நோக்கமே, மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கடலை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும்! இதுதான் இந்திய அரசின் முடிவு.”
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்க பொதுசெயலாளர், என்.ஜே.போஸ்:
“கடலுக்கு சென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லாத நிலையில் நாங்கள் உள்ளோம். டீசல் விலை உலகத்திலேயே இல்லாத அளவுக்கு இங்கு உயர்ந்திருக்கிறது. படகுகளை இயக்கமுடியாமல், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில், மீனவர்கள் நாங்கள் கடலுக்குச்செல்ல அரசாங்கம் ஒரு எல்லைக்கோடு போடுகிறது. அந்த எல்லையைத் தாண்டினால் அபராதம், சிறைதண்டனை என அச்சுறுத்துகிறது. இந்த வேலையை இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் தான் செய்துகொண்டிருந்தது. இப்போது சொந்த இந்திய அரசாங்கமும் செய்யப்போகிறது.

இந்த மீன் பிடிக்க அனுமதி வாங்க வேண்டும், மீனைத் தான் பிடிக்க வேண்டும், இந்த எல்லைக்குள்தான் பிடிக்க வேண்டும், பிடிக்கும் மீனுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அடுக்கடுக்காய் கட்டளை போடுகிறார்கள், இந்த முறை எந்த நாட்டிலாவது உண்டா? தரையிலிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை கடலுக்கு நகர்த்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு!

எங்களுடன் அவர்கள் மீன்பிடிக்க வந்தார்களா? நாங்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்தார்களா? எங்கள் படகுகளை இலங்கை கடற்படை பிடிக்கும்போது, மீட்டுக்கொடுத்தார்களா? இல்லை நஷ்டஈடு கொடுத்தார்களா? இதில் எதுவுமே செய்யாதவர்கள் இவர்கள். குறைந்தபட்சம் நாங்கள் அரசுக்கு ஈட்டித்தரும் அந்நிய செலாவணியைக் கொண்டு, நாங்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கவாவது செய்யலாம். அதுவும் இல்லை. இப்படி எந்த உதவியும் செய்யாத அரசு, புதிய சட்டத்தை கொண்டுவந்து எங்கள் தலைமீது கைவைப்பது ஏன்?
ஆறேழு மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, தாங்கள் மெஜாரிட்டி அரசாங்கம் என்பதால் அதை துச்சமாக நினைத்தார்கள். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள மீனவர்கள் நாங்கள் வெகுண்டெழுந்தோமானால் இந்த அரசாங்கம் தாங்காது. உடனடியாக இந்த சட்டதை திரும்பபெற வேண்டும். இல்லையெனில், நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.”
ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர், சேசு:
“டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது, ஏற்றுமதி செய்யக்கூடிய இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்துள்ளது. இப்படியொரு இக்கட்டான சூழலில் மீனவர்கள் நாங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்க, இந்திய அரசாங்கம் புதிதாக கடல்மீன்வள சட்டத்தை இயற்றப்போவதாக தெரிவிக்கிறது. இந்த சட்டத்தினால், அவர்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தான் மீன் பிடிக்க வேண்டும், அதை தாண்டி சென்றால் அபராதமும், சிறைதண்டணையும் கிடைக்கும். மேலும், அனுமதி பெற்று டோக்கன் வாங்கிக்கொண்டு தான் மீன்பிடிக்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மீன் பிடிக்ககூடாது. எந்த வலையை கொண்டுசெல்கிறோமோ அதைதான் உபயோகிக்க வேண்டும், வேறுவலை மாற்றவேண்டுமென்றால் அதற்கும் ஒரு அனுமதி வாங்க வேண்டும் என எல்லாவற்றுக்கும் தனித்தனியாக ஒரு சட்டம் இயற்றினால் எப்படி நாங்கள் பிழைப்பது?

கடலோடு போராடிக்கொண்டிருப்பவன், ஒவ்வொரு முறையும் இயற்கையை எதிர்கொண்டு கடலுக்கு செல்பவன், இயற்கை சூழலுக்கு தகுந்தாற்போல் தான் வலைவிரிக்கவே முடியும். இப்படியெல்லாம் சட்டம் போட்டால் எங்களால் வாழவே முடியாது. கடல்தோன்றிய காலத்திலிருந்தே சுதந்திரமாக மீன் பிடித்து வருகிறோம். இப்படியொரு சட்டம் இப்போது எதற்கு? ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அவனும் போராடி செத்துகொண்டிருக்கிறான்.
இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு பாடுபடுவது இரண்டே பேர் தான். ஒன்று விவசாயி இன்னொன்று மீனவர்கள். அவர்கள் விவசாயம் செய்து வாழ்வதற்கு உணவு தருகிறார்கள், நாங்கள் மீன்பிடித்து, கடல் உணவு தருகிறோம், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறோம், ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணி மூலம் பொருளாதாரம் தருகிறோம். ஒரு பெரிய நாட்டுக்கு சம்பளம் வாங்காத காவலாளியாக எல்லை ஓரத்தை காத்து நிற்கிறோம். இப்படியெல்லாம் இருக்கும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபடியாக திடீரென்று, இப்படி ஒரு சட்டத்தை நிறிவேற்றினால் நாங்கள் என்ன செய்வது?
கார்ப்பரேட்டுக்கு உதவும் வகையில், வெளிநாட்டு கப்பல்களுக்கு திறந்துவிடும் நிலையில், பெரிய முதலாளிகளுக்கு கடலை குத்தகைக்கு விடப்படும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்த சட்டத்தை உயிர் இருக்கும் வரையில் நாங்கள் எதிர்ப்போம். எதிர்த்து போராடுவோம்.”

இந்த சட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் கருத்து கேட்டறிய, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவர் தமிழக மீனவர்களிடம் குறைகேட்பு சந்திப்பில் ஈடுபட்டிருப்பதால் அழைப்பை ஏற்று பதிலளிக்கவில்லை.