டெல்டா வகை கொரோனா வைரஸை தடுக்கவேண்டுமானால் 95 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளித்தாக வேண்டும் என பிரான்ஸ் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பிரான்ஸ் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அறிவியலாளர்கள் குழு ஒன்று, டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டுமானால் 95 சதவிகிதம் மக்களுக்காவது தடுப்பூசி போட்டாகவேண்டும் என்று கூறியுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகள் பெருமளவில் போடப்பட்டுவருவதையும் மீறி, டெல்டா வகை கொரோனா வைரஸுடன் தொடர்புடைய நான்காவது அலை ஒன்று வெகு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நாட்டு மக்களில் 90 முதல் 95 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி வழங்கினால், அல்லது மக்கள் தொற்றுக்கு ஆளானால் மட்டுமே, கொள்ளைநோயை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்கிறார்கள் அவர்கள்.
பிரான்சைப் பொருத்தவரை, இதுவரை மக்கள்தொகையில் பாதி பேருக்கு மட்டுமே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
40 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளார்கள். பிரான்ஸ் அரசு, ஆகத்து மாதத்திற்குள் எப்படியாவது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, அதாவது 35 மில்லியன் பேருக்கு தடுப்பூசி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
மக்கள் கோடை விடுமுறை முடிவது வரை தடுப்பூசி போடுவதை தள்ளிவைத்தார்கள் என்றால், அப்புறம் மிகவும் தாமதமாகிவிடும் என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏற்கனவே பிரான்சில் கொரோனா பாதித்தவர்களில் பாதிபேர் டெல்டா வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது 60 சதவிகிதம் அதிக தொற்றும் திறன் கொண்டது என நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sources: https://news.lankasri.com/article/need-to-be-vaccinated-to-stop-delta-variant-1625907363