டெல்லி: கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அப்போது சில நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியை விதித்தது. இதனால் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கெய்ர்ன் நிறுவனம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரிட்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
கெய்ர்ன் நிறுவனம் இந்நிலையில் இந்த வழக்கில் கெய்ர்ன் நிறுவனத்துக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. மேலும், 2020ஆம் ஆண்டு வரை வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியின் டாலரை நஷ்டஈடாக கெய்ர்ன் நிறுவனத்திற்கு இந்தியா அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியாவின் சொத்துகள் இந்தியாவிடம் இருந்து நஷ்டஈடு தொகையை விரைவாகப் பெற்றுவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் கெய்ர்ன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளில் கெய்ர்ன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலகில் இந்தியாவுக்குச் சொந்தமாக உள்ள 70 பில்லியின் டாலர் மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்துள்ளதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் முடக்கம் அதன்படி பிரான்ஸ் நாட்டில் 20 முக்கிய இடங்களில் அமைந்துள்ள இந்தியச் சொத்துக்களை முடக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரான்ஸில் அமைந்துள்ள 24 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விற்க முடியாது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான பிளாட்களே முடக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பிளாட்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக இனிமேல் அந்த சொத்துக்களை இந்திய அரசால் விற்க முடியாது.
நிதி அமைச்சகம் விளக்கம் இருப்பினும், இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியாவின் சொத்துக்களை முடக்குவது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு எதுவும் கிடைக்க வில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்துள்ளது என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.